மதுர நீரோடை எனும் இவ்வலை தளத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.....
உள் நுழைய முன்.....
மனிதனை மிக அழகாகப் படைத்தது மட்டுமன்றி, தெளிவாகப் பேசும் கலையையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்து, அவனது நேர்வழிக்காக அரபு மொழியில், இறுதி மாமறையாம் அல்குர்ஆனையும் அருளிய ஏக இறைவன் அள்ளாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ். அரபுக் குலத்தை சேர்ந்த, அண்ணல் நபியின் மீதும், அவரை பின்பற்றிய அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் அவனின் அருளும் சாந்தியும் என்றென்றும் நிலவட்டுமாக.
அரேபியப் பாலைவனத்தில், அன்று இஸ்லாம் எனும் கதிரவன் சுடர் விட்டு உதயமானதிலிருந்து இன்றுவரை, இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் சமய மொழியாக அரபு மொழி, தொடர்ந்தும் இருந்து வருவதை நாம் அனைவரும் நன்கறிவோம். அத்துடன், மறுமை நாள் வரும் வரை, சாகாவரம் பெற்ற ஒரேயொரு மொழி இது ஒன்று மட்டுமே எனலாம். முஸ்லீம்களின் நிலையான சட்ட யாப்பாகிய திருமறைக் குர்ஆன், இம்மொழியில் அருளப் பெற்றதும், இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று, இம்மொழியை பேசுபவராக இருந்தமையும் இதற்கான நியாய காரணம் எனலாம். ஆக, இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட திட்டங்களை சரிவரப் புரிந்து கொள்ளவும், வழமையான வணக்க வழிபாடுகளை முறையாக நிறைவேற்றவும் இம்மொழி முஸ்லீம்களுக்கு அவசியப்படுவதால், இம்மொழியை ஓரளவேனும் அவர்கள் கற்றுத் தேர்வது இன்றியமையாததாகும்.
கால வெள்ளோட்டத்தில், எம்மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் ஆட்படாமல், விழுது தொங்கும் விருட்சமாக, இதன் ஆணிவேர் இப்பாரில் ஆழ வேரூன்ற, கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கும் ஆதி மொழிகளில் ஒன்றாக அரபு மொழி இன்றளவும் விளங்குகின்றது. அத்துடன் பதின்நான்கு நூற்றாண்டு காலமாக, உலகெங்கிலும் தோன்றிய பல்வேறு நாகரீகங்களின் கலைப் பொக்கிஷமாகவும் இம்மொழி விளங்கியுள்ளது என்பதும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கப்பால், நூற்றுக்கணக்கான உலக மொழிகளுக்குள், சர்வதேச நன்மதிப்பை வென்று, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்ட, சர்வதேச தொடர்பாடல் மொழியாகவும் இது பரிணமித்துள்ளது. அந்த வகையில், வெறும் ஒரு மதத்தையும், நாகரீகத்தையும் மையப் படுத்திய மொழியாக மட்டும் சுருங்கி விடாமல், உலகளாவிய தொடர்பாடல் மொழியாகவும் இம்மொழி வளர்ச்சி கண்டுள்ளது என்பதே பேருண்மை.
இத்தகைய தனித்துவங்களையும் சிறப்பம்சங்களையும் தன்னகம் கொண்ட அரபு மொழியை, இன்றளவும் ஆவலுடன் கற்கும் பலர் உலகெங்கிலும் உள்ளனர். இத்தோரணையில், பாரெங்கும் பரவி வாழும் பல முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் இம்மொழியைத் தேட்டத்துடன் இன்று, கற்கவும் கற்பிக்கவும் தலைப்பட்டுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக, அரபு மொழியினைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை இலக்குவைத்து இயற்றப்பட்ட நூற்களும், வடிவமைக்கப்பட்ட வலைத்தளங்களும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு தான். அதிலும் குறிப்பாக, தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வலைத்தளங்கள் எனும் போது, அவை தமிழ் உலகில் அறவே இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால், உலகின் பல பாகங்களில் சிதறி வாழும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, இருபது மில்லியனுக்கும் அதிகமானவர்கள், அரபு மொழியைக் கற்பதில் பல்வேறு சிரமங்களை தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர். காரணம், அரபு மொழியை ஆழக் கற்றுக் கொள்ள, அரபு மத்ரஸாக்களைத் தவிர வேறு வழியேதும் இவர்களுக்கு இல்லாமல் இருப்பதேயாகும். ஆக, இன்று உலகை ஆளும் இணைய தள வசதியினூடாக, இலகுவில் அரபு மொழி அறிவை அடைந்திட, ஒரு சிறந்த வாய்ப்பாகவே இவ்வலைத்தளம், பல தூர நோக்குகளுடன் நன்கு திட்டமிடப்பட்டு, எண்ணற்ற தலைப்புகளில் பாடங்கள் தலைப்பு வாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டு, கற்பவர் மனதைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எமது இவ்வலை தளத்தில்,
1. சொற்களஞ்சியம் ( vocabularies )
2. அடிப்படை அறபு ( basic Arabic )
3. உரையாடல் ( conversation and spoken Arabic )
4. இலக்கணம் ( grammar )
5. வசன அமைப்பு ( phraseology )
6. கட்டுரைகள் ( essays )
7. அணி இலக்கணம் ( rhetoric )
8 பழ மொழிகள் ( proverbs )
9. கவிதைகள் ( poems )
10. கடிதங்கள் ( letters )
11. மாதிரிச் சான்றிதழ்கள் ( certificates )
12. மாதிரி வினாத்தாள்கள் ( exam model papers )
13. உரைகள் ( speech )
14. பத்திரிகைச் செய்திகள் ( news )
15. அறிவுரைகள் ( guidelines )
16. அறபை வளர்த்த அறிஞர்கள் ( biographies of grammarians )
17. மொழி வளம் ( language common skills )
18. பரவலான பாவனைகள் ( common Arabic uses )
19. வாழ்த்துக்கள் ( greetings )
20. நகைச்சுவைகள் ( anecdotes )
என இருபது பெருந்தலைப்புகளிலும், அவற்றுடன் இணைந்த மேலதிக துணைத் தலைப்புகளிலும், ஆயிரக்கணக்கான பாடங்களை, பார்ப்பவர் பரவசமடையும் விதமாக உள்வாங்கியுள்ளோம். அந்த வகையில், ஆரம்ப நிலை மாணவர்கள், கனிஷ்ட பிரிவினர், முன்னிடை மாணவர்கள், உயர் தர மாணவர்கள் என அனைவருக்கும் பொருந்தும் விதமாகவே, வசனங்கள் உதாரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. அத்துடன், பல்வேறு நூல்களை வாசிக்கும் போது கிடைக்கப் பெற்ற அரிய பல வாசகங்கள், கூற்றுக்கள், மொழித் துணுக்குகள், எளிய மொழிநடை, சகல தரப்பினருக்கும் பொருந்தும் பல்வகை உதாரணங்கள் என்பன பாடப் பரப்பின் தனித்துவங்களாக உள்ளன. ஆக, உங்கள் அரபு மொழித் தாகத்தை தீர்க்க, உங்கள் அருகே சதா ஓடிக் கொண்டிருக்கும் தூய, மதுர நீரோடை இதுவென்றால் அது மிகையல்லவே.
இவ்வலைத்தளத்தைப் பயன்படுத்தும் முறை.
பின்வரும் இணைப்பை ( link ) https://arabicocean2020.blogspot.com. சொடுக்குவதன் மூலம் இவ்வலைத்தளத்தில் நீங்கள் உள்நுழைகிறீர்கள். இப்போது, இவ்வலைத்தளத்தின் முகப்பை அடைந்த நீங்கள், அதன் இடது பக்க மேல் மூலையில் உள்ள முக்கோட்டு அம்புக்குறியினை சற்று அழுத்துவதன் மூலம், இவ்வலைத்தளத்தின் உள்ளடக்கத் தலைப்புகள் யாவும், உங்கள் இடது பக்கத்தில், ஒன்றன் பின் ஒன்றாக செங்குத்தாகக் கிடப்பதைக் காண்பீர்கள். ஒவ்வொரு பெருந் தலைப்புகளையும் நீங்கள் தொடுவதன் மூலம், அதனுடன் தொடர்புடைய துணைத் தலைப்புகளையும் அவற்றின் அருகிலிருக்கக் காண்பீர்கள். இப்போது, நீங்கள் விரும்பும் தலைப்புகளை தெரிவு செய்து, அதை சற்று நீங்கள் அழுத்தும் மறுகணமே, தேவையான பாடங்களைப் படித்திட, பாடப்பரப்புக்குள் இலகுவாக உள் நுழைந்து விடுவீர்கள்.
அன்பின் வாசகர்களே......
ஆம், பலரின் அனுப ஆலோசனைகளைப் பெற்று, இரவு பகலாக, பல பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு, கண்கவராக வடிவமைக்கப்பட்ட இவ்வலைத்தளத்தின் ஆக்கங்கள் மற்றும் பாடங்கள் குறித்த, வாசகர்களாகிய உங்களின் அரிய பல ஆலோசனைக் கருத்துக்களை ஆவலுடன் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம். எது எவ்வாறாயினும், இது வெறும் ஒரு மனித முயற்சி மட்டுமே என்பதால், நாம் கண்டு கொள்ளத் தவறிய சில நுணுக்கமான தவறுகளும், குறைகளும், இதில் நிச்சயம் இடம்பெற வாய்ப்புண்டு என்றே நாம் நம்புகிறோம். அவற்றை நீங்கள் முறையாக சுட்டிக் காட்டும் வேளை, அவற்றை இயன்றவரை திருத்திக் கொள்ள முயற்சிப்போம். மேலும், எமது ஆக்கங்கள் சிலவற்றில் இடையிடையே சில தனிநபர்களினதும், இடங்களினதும், அமைப்புகளினதும் பெயர்கள் மிக வெளிப்படையாக இடம் பெறுவதை நீங்கள் காண்பீர்கள். ஆக, அவையாவும் வெறும் கற்பனை நாமங்களே அன்றி வேறில்லை என்பதை சஞ்சலப்படாமல் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.
முடிவாக, பல வேலைப்பளுக்கு மத்தியில், இந்த அரிய பணியை ஓரளவேனும் வெற்றிகரமாக செய்து முடிக்க, அருள் செய்த ஏக இறைவன் அள்ளாஹ்விற்கு முதலில் நன்றி கூறிய பின், இவ்வலைத்தளத்தை வடிவமைக்க பல வழிகளிலும் உதவிய, ஆலோசித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நம் இதயம் கனிந்த நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். அல் குர்ஆனின் மொழியான அரபு மொழிக்கு நாம் செய்த, இப்பூர்வாங்க முயற்சியினை வல்ல அல்லாஹ், அவனது தனிப் பெரும் கருணையினால் ஏற்றுக் கொண்டு, இதன் மூலம் பலரையும் நற்பயன் பெறச் செய்வானாக. ஆமீன்.
ماشاء الله
ReplyDeleteماشاء الله
ReplyDeleteالسلام عليكم ورحمة الله وبركاته
ReplyDeleteமதிப்பிற்குரிய எனது நண்பரும் சகோதரர்மான அஷ் ஷேய்க அபூ ஸுஆத் முஹம்மது நிஹார் அப்துல்லாஹ அல் அப்பாஸி அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளே நமது மூல ஆதாரங்களாகும் அவைகள் இரண்டின் மூல மொழிகளும் அறபிப் பாஸையாகவே காணப்படுகிறது.
இந்த மொழிக்கு தொண்டாற்றுவது வெறும் பாசையை கற்பிப்பது மட்டுமன்றி இந்த மார்க்கத்துக்குச் செய்யும் பேருபகாரமாகும். அந்தப்பணியை நமது சேஹ் அவர்கள் மிக நீண்ட காலமாக செய்து வருவது பலரும் அறிந்த விடயமாகும். அந்த பணியின் அடுத்த கட்டமாகவே இந்த இணையத்தளத்தை நான் பார்க்கிறேன்.
உண்மையில் வெற்றிப்பாதையில் வீறுநடை போடும் இந்த முயற்சி தமிழ் உலகில் இன்னும் பலரும் பயனடைவார்கள் என்று நம்புகிறோம். அதற்காக எமது பிரார்த்தனைகளும் உதவிகளும் என்றும் இருக்கும். வல்ல நாயன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக
உங்கள் சகோதரன்
முஹம்மது நாசர் துபாயிலிருந்து.....
BEST WEBSITE AND KEEP IT UP PLSSSSS
ReplyDelete